சூரிய வெப்பம் ஏன் இப்படி கொதிக்குது?
கடல் மண் ஏன் வெப்பமாய் இரிக்கி?
கடவுளின் படைப்பு !!!???
ஓ அப்படியா..
நாம ரண்டு பேரும் ஏன் இந்த கிழட்டு ஆமைக்கு பின்னால போய் கொண்டு இரிக்கம்?
இந்த ஆமை முட்டை போட தான் போய் கொண்டு இரிக்கி.
முட்டைய எடுத்தம் என்டா இன்டைக்கு இரவைக்கு வயிறார தின்னலாம்.
ஆமை கடற்கரை க்கு வாற முட்டை போடுறதுக்க?
ஓம்.. அம்மை சொல்லியிருக்காவு.
வெறும் காலோட இன்னும என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா. மண் சுடுது.
உன்னால எப்பிடி ஏலுது?
என்னால ஏலும்……
எனக்கு பசிக்கு வயிறு முட்ட தின்ன ஏதாவது வேணும்
கால் கொந்தளிச்சு .. காலே இல்லாம போனாலும் பரவால்ல.
என்னால இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா .. உயிரே போயிடும் போல இரிக்கி.
உனக்கு இந்த கடற்கரை ஓரமா இரிக்கிற பற்றை செடியால செருப்பு செஞ்சு தாறன்.
ஓம்……கெதியா செஞ்சு தா சுணங்காத..
இப்ப முடியுதா?
கனக்க இல்ல கொஞ்சமா சுடுது..
கொஞ்சம் பொறன்டி.. இன்னும் கொஞ்ச துரம் போனா ஆமை முட்ட போடும் அத புறக்கி போவம்
ஆமை முட்ட நல்ல சத்து “அம்ம “ சொல்லியிருக்காவு.
ம்…சரி…
ஆமை எத்தின முட்டை போடும்?
ஆமை ஆயிரம் முட்டைய சத்தம் இல்லாம போடுமாம்.
ஓ……
சரி அப்ப கட்டாயம் எல்லாருக்கும் போதுமாயிரிக்கும்.
எனக்கு உனக்கு அம்மைக்கு .. மற்ற எல்லாருக்கும்…
குடிச்சு போட்டு கந்தோரில படுத்திரிக்கிற அப்பாக்கும் போதுமா இரிக்கும் என்ன?நிறைய நாளைக்கு..?
ம்…
அப்பா ஏன் குடிக்கிறவரு?
அவருக்கு கவலையா?
அம்மைக்கு தானே நிறைய கவலை அப்ப அம்ம ஏன் குடிக்கிறது இல்ல??
அம்ம "பொம்பிள" குடிக்க மாட்டாவு.
அப்ப பொம்பிளையள் குடிக்க ஏலாதா?
ஏலா. ..பொம்பிளையள் அடக்க ஒடுக்கமா இரிக்க வேணும்.
வாயில மண் இல்லாட்டி.
ஏன் ????
தெரியாடி….எனக்கு…!!
அப்பாக்கு என்ன கவலை?
அவருக்கு அம்மைய பிடிக்க இல்லையா?
தெரியாடி ….இந்த மாதிரி உன்ட லூசு கேள்விய எல்லாம்
இரவில நட்சத்திரம் எண்ணுவியே படிக்காம… அப்ப கேளு..
இல்லாட்டி அப்பருட்ட கேளு…
அக்க .. கால் சுடுது.. நீ செய்த செருப்பு சரியில்ல.
வா நாம வீட்ட போவம்..
ஆமை முட்டை போடாது அக்க …!
நாம திரும்பி போவம் வா……
அந்த கிழட்டு சனியன் பிடிச்ச ஆமை போய் கொண்டே இரிக்கி ..
பாவம் டி கிழட்டு ஆமை..
நாமதானே முட்டைய எடுக்க போறம்…
அது பின்னால வா முட்டை குடுக்கிறன் என்டு.உன்ன கூப்பிட்டதா?
எனக்கு முட்டை வேணா.நான் வீட்டுக்கு போகோணும்.
என்னை வீட்டுக்கு கூட்டித்து போ…
நாம மாட்டுக்கு போடுற மரவெள்ளி கிழங்கு வேரை எடுத்து அவிச்சு தின்னலாம். எனக்கு முட்டை வேணா…..
சும்மா வாடி ….
இல்ல “அக்க”…எனக்கு முட்டை வேணா மரவெள்ளி கிழங்கு
போதும்.
சரி .. நாம போவம்.
எந்த வழியால போறது .
பார்க்கிற இடமெல்லாம் ஆமை தடம் தானே இரிக்கி..
இது என்ன கோதாரி..!!
எங்கயோ இடம் தெரியாம வந்துட்டம் .
இந்த கிழட்டு ஆமை எங்கள எங்கயோ கூட்டித்து வந்துத்து.
வந்த வழியால திரும்பி போவம் அக்க
அப்பிடியே கடலை .. அடியா கொண்டு.
வேற வழி இல்ல நமக்கு ..
அம்ம மாவிடிக்க போயிருப்பாவு.
நாம போய் சேரும் போது சுணங்கிரும்.
இனி என்ன பண்ணுறது?
வாடி
அந்த தெருவால வீட்ட போவம்.
பாசிக்குடாக்கு வந்துத்தம் ...!
நீதான் ஆமை முட்டைக்கு அவா பிடிச்சு வந்தாய் நான் அப்பவே
சொன்னன். வேணாம் மரவெள்ளி கிழங்கு வேர தின்டுபோட்டு கிடப்பம் என்டு.
வா .. இது தான் ஆரைப்பத்தைக்கு போற சரியான வழி..
போவம் வா..
நீ .. என்ன ஏமாத்துறாய்..
இல்லடி வா .. இது தான் வழி.
ம்…
நடந்து நடந்து கால் எல்லாம் நோகுது.
கொஞ்ச தூரம் தான்
“இந்தா அவ்வடத்துக்க தான் இரிக்கி”
ம்…
வடிவு சுந்தரிகள் இரண்டு பேரும் எங்க சுத்தித்து வாறாங்களோ???
இல்ல அம்ம நானும் இவளும் ஆமை முட்டைக்கு போனம்…
மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேரை புறக்கித்து வர சொன்னா
இந்த இடமெல்லாம் விளையாடி திரிஞ்சு போட்டு இப்பதான்
வாறாளுகள்...
நான் என்னத்த செய்வன் ஒரு புள்ளையா ரண்டு புள்ளையா ..
ஒன்பது புள்ளைகள்.
எப்பிடி இரணம் குடுப்பன்.
சரி ..சோனக தெருவுக்கு போய் மாவிடிச்சு குடுத்துத்து ..சந்தைக்கு போய்...
ஏதும் இரணம் வேண்டுற என்டா வேண்டித்து வாறன்.
சந்தை கலைஞ்சு போயித்து ..
யாதால ஒன்டும் இல்ல..
வாழைப்பழ சுழையும் செல்வன் மீனும் தான் இருக்கி
ஆக்கி தாறன் தின்னுங்க. செல்வன் மீன் சொதியும் சோறும் நல்லா இரிக்கும் மக்காள்..
ம்.. சரி அம்ம ..இவள் சின்னவள்..
கிணத்தடியில குழிச்சு கொண்டே இரிக்கிறாள்
வாழிய தாறாள் இல்ல எனக்கு குழிக்க.
குடுடி வாழிய புள்ள பாவம்.
அம்ம பாவம் .. அக்க..
எத்தின காலத்துக்கு தான் இப்பிடி ….
காலம் இப்பிடியே போயிருமா?
அம்மை மாவிடிச்ச காசில தான் ஒரு நேரம் தின்ன வேணுமா?
காலமையில மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேர்தானா?
என்டைக்காவது நாம புது சட்டை போட்டு திருவிழாக்கு போய் வருவமா?
வயிறு நிறை சோறு தின்னுவமா?
ம்…………. நாம மாடா புறந்து இரிக்கலாம் அக்க...
புல்லையும் மரவெள்ளி வேரையும் வயிறு முட்ட தின்டு கழிச்சு திரிஞ்சிரிக்கலாம்..!!!
(*பாசிக்குடா *ஆரைப்பத்தை( ஆரையம்பதி) *சோனக தெரு – இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கும் இடங்கள்.
*கதையில் கையாளப்பட்டிருப்பது மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழ் )