Tuesday, May 29, 2007

ஆண் சிலந்திகள்..!

என்னுள்ளே சில சிலந்திகள்
அத்துமீறி பிரவேசித்து...
என் பனி படர்ந்த இதயத்தை மெதுவாய் முத்தமிடும்
அந்தரத்தில் அவை வலைகட்டி தொங்கும்...

என்றென்றோ புதைத்த...
மன ஆழ கிடங்குகளில் இருக்கும்
கறைபடிந்த ஏடுகளையும் கறை படியா ஏடுகளையும்
கிளறி எடுக்கும்...
கேள்வி எழுப்பும்...

எண்ணற்ற மொழிகளில் எழுதிய
சாபங்களில் சுவட்டை..
நாக்கால் நக்கும்..
சாபங்கள் சிலந்திக்கும் சாபமிடும்..
சிலந்தி கேள்வி எழுப்பும்...

ரணமான கணங்களில்...
கசிந்த இரத்த கறைகளை
மோப்பமிடும்..
ஏன் ஏன் .. ஏன் ..
என்று கேள்வி எழுப்பும்..

அர்த்தம் இல்லா சிலந்தியின் கேள்வியில்
இதயம் சலிப்படையும்
நான் பெண் என்று சொல்லும்...

சிலந்தி சிரிக்கும் .....
பதில் கிடைத்த ஆவேசத்தில்..
சிரிக்கும்........
சிரித்து கொண்டே இருக்கும்...
இரத்த நாடிகள் நாளங்கள் எங்கும்
சிலந்தியின் சிரிப்பதிர்வுகள் பரவும்..

சிலந்தி மீண்டும் தோண்டும்..
காரணம்..தேடி தோண்டும்
இதயம் வலியில் துடிக்கும்
வேண்டாம் என்று கெஞ்சும்...

சிலந்தி தோண்டும்..
ஆண் பலத்துடன் தோண்டும்..
கேள்வி எழுப்பும்...
சிலந்தி கேள்வி எழுப்பும்..

இதயம் மெளனித்து இருக்கும்.
சிலந்தி மீண்டும் மீண்டும்
கேள்வி எழுப்பும்..
இதயம் மெளனித்தே இருக்கும்..

வலிகளின் உச்சம் இதயம் இரத்தம் கசியும்..

சிலந்தி தோண்டும்..
கிழித்து குதறி தோண்டும்..
தன் முழு பலத்துடன் தோண்டும்..
தோண்டிக்கொண்டே இருக்கும்..

வலிகளின் உச்சம் புறககணிப்புகளின் உச்சம்
இதயம்...
சிரிக்கும்... சிரிக்கும்
ஆவேசமாய் சிரிக்கும்...
அதிர்ந்து அதிர்ந்து சிரிக்கும்
சிரிக்கும்...

சிரிப்பதிர்வில் .. சிலந்திகள்
வெடித்து சிதறும்..
சிலந்திகள் வெடித்து சிதறும்!!!

4 comments:

Ken said...

பெண் சிலந்திகள் என்ற பொருளிலும் உங்களின் கவிதை வலி சொல்கிறது. ஆகவே நானும் என் புலம்பலுக்கு உபயோகிக்கலாம்,பெண் சிலந்திகள் நன்று

Ken said...

"எண்ணற்ற மொழிகளில் எழுதிய
சாபங்களில் சுவட்டை..
நாக்கால் நக்கும்..
சாபங்கள் சிலந்திக்கும் சாபமிடும்..
சிலந்தி கேள்வி எழுப்பும்...

ரணமான கணங்களில்...
கசிந்த இரத்த கறைகளை
மோப்பமிடும்..
ஏன் ஏன் .. ஏன் ..
என்று கேள்வி எழுப்பும்..

அர்த்தம் இல்லா சிலந்தியின் கேள்வியில்
இதயம் சலிப்படையும்
நான் ஆண் எனச்சொல்லும்"
ம்ம் இது எப்படி இருக்கு

கீர்த்தனா said...

கென்.. உங்களது "சாபங்களின் மோகனம்" எனும் மின்நூலினை வாசித்தேன்.
காதலின் வலி .. நிராகரிப்பின் வலி நூல் முழுதும் விரவியிருக்க கண்டேன்.

ஆண்சிலந்தி எனும் கவிதை உங்களை பாதித்து இருக்குமானால் வருந்துகிறேன்.
நான் தனி மனிதருக்கு எதிராகவோ ஆண்களுக்கு எதிராகவோ இக்கவிதையை எழுதவில்லை...

"ஆண் சிலந்தி"எனும் பதிவு "ஆண் அதிகாரத்துக்கு" எதிரானது ஆண்களுக்கு எதிரானது அல்ல...

நன்றி பின்னூட்டமிட்டமைக்கு....

ஜெயபாலன் said...

ஒரு ஆண் கவிஞனால் எழுதிட சத்தியமில்லாத சில வரிகள். தமிழர்கள் பெண்களைக் கற்றுக் கொள்ள உதவும்..