Wednesday, October 10, 2007

பழைய-- புது ...இருப்புக்கள்


பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு

வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..


கரு முகிலும் வெண்பனியும்

சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட

அதை நாசம் செய்யலாம்..

யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..

மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….


காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து

வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு

பரந்தது....

..காணாமல் போனது..!!


நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும்

துர் வாடை வாயினால்…

எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..

என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..


என் புது இருப்பு..

பூக்கூடைகளில் இருந்து..

ரோஐாக்களையும் .. அல்லிகளையும்

அள்ளியெடுத்தபடியும்..

அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும்

தொடரும்..!!!


10/10/2007

Tuesday, August 28, 2007

ஆண் வண்டின் காதல்!!!

காலை வேளை வீடு வந்த சிறிய வண்டு
மலர்களை தேடிய களைப்பில் அழுதது.

விடியும் வேளை வண்டின் அழுகை கவலை ..
மலரில்லா மரங்கள் கொடிதெனச்சொல்லியது.
வசை மாரி பொழிந்தது ..

காடுகளில் மலர் தேடி அலைந்த கடுமை சொன்னது..
தன் துணை தவறவிட்ட கொடுமை சொன்னது..
சிணுங்கிய கணங்களும்.. கதறி அழுத நினைவுகளும்..
காற்றில் கடலில் கரைந்ததாய் தான் தேடி அலைந்ததாய்
கூறி அழுதது..
மயங்கி விழுந்து

Tuesday, July 17, 2007

கருவறை

சுட்டெரிக்கும் ஒரு பகல் பொழுது…
அன்று சூரியன் மிக அருகில்
இருந்தது..

என் கண்ணால் ஓழுகும் நீர் கண்டு
தெரு நாய் ஒன்று என் கால் நக்கியது.
மனிதர்கள் .. ஏராளம். அங்குமிங்குமாய்
ஐந்துவை பார்ப்பதாய் .. பார்த்து ..
பார்த்து .. சென்றனர். .

என் இதயம் பெரிதாய் ஓலமிட்டது.
மனிதர் முன் அழாதே….
“அதை விட கேவலம் எதுவும் இல்லை”
கண் கேட்க மறுத்தது..
சல சல வென.. கண்வழி நீர் .. உடலையும்
நனைத்தது…


மனம் ஏதேதோ சொன்னது …
பரியத்துக்குரியவர் யாரும் நினைவில்
இல்லை….
தொலை பேசி எண்கள் ..
மூளையை விட்டு மிக வேகமாய் ஓடித்தொலைந்து…

ஒரு காலத்தில்….
எனக்கு எல்லாமுமாக இருந்த என் சொந்த வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் ..
வெட்டி அகற்றப்பட போகிறது..
என் தாயின் கருப்பை..


நான் சூன்யமானேன்..
வடிவமில்லா எழுத்துக்கள் .. சொற்களில்லா
மொழிகள் ..என ..நான் சூன்யமானேன்..

இல்லாத கடவுளர்களை எல்லாம் உதவிக்கு
அழைத்தேன்..
கடவுள் இல்லை என்று சொல்லி வாதிட்ட ..
என் வாதங்களை மீ்ட்டுக்கொள்ளுவதாக
கெஞ்சினேன்…

மண்டியிட்டு அதற்க்காக மன்னிப்பும் கேட்டேன். .
எதை நம்ப சொன்னாலும் நம்பும் நிலையில் இருந்தேன்..
ஐயோ .. நேத்தி கூட வைத்தேன்..

எனது பலம் என்னை விட்டு
தூர ஒடிப்போனது …
நான் ஒன்றுமில்லாதவள் ஆனேன். ..
மனதால் நிர்வாணமானேன்…

எல்லாம் முடிந்து இருக்க வேண்டும் ..
நான் சுய நினைவிற்க்கு வந்த போது..
அப்போது களைத்திருந்தேன்.

Thursday, June 14, 2007

மெலிந்த பல்லியுடனான உரையாடல்!

விடியலை எதிர் நோக்கி...
அண்ணாந்து வானத்தை
பார்த்த வண்ணம் இருக்கிறது பல்லி.
சின்ன பல்லி. ..
பச்சையும் நாவலுமாய் அதன் நரம்புகள்..
பார்ப்பதற்க்கு பாவமாய் மெலிந்தும் இருக்கிறது..

நாக்கை எடுத்து ஏதோ சொல்ல எத்தனித்தாய் ..
உச்சு கொட்டியபடி என்னை
உற்றே பார்க்கிறது.
கடுகினை ஒத்த அதன் கண்ணிரண்டையும்
உருட்டியே பார்க்கிறது.

நான் உற்று பார்க்கிறேன்...
அதன் கண்விழிக்குள்.
ம்…
ஏக்கம் .. கோவம் தனிமை ……
எந்த மொழியில் சொல்லும் பல்லி..?

இந்த இராப்பொழுதில் யாருமற்று
நானும் பல்லியும்
தனித்தே இருக்கிறோம். ..
மெல்லிய குரலில் “ச்சு ச்சு ச்சு”
என்று சத்தம் கொடுத்தேன்..

பல்லி "பேச்சு" கொடுத்தது.
நான் பயந்து வியந்து பிரமித்தேன்..

உறங்காமல் விழித்திருந்து ..
அழுது சோர்ந்து …
கறுத்து சிறுத்திருந்த என் விழிகளை
தன் மெல்லிய வாலால் தடவிற்று.

தனிமை.. இரவு …அழுகை..
கொடுமை …
பல்லிக்கு புரிந்தது..
சில மனிதர்க்கு புரிவதில்லை!

“இலங்கை… என் நாடு..
என் தாய் நாடு..
அம்மம்மா வீடு …அம்மா தம்பி
சித்தி
வளவு….மண்..
உறவுகள்…”

பல்லியின் வால் ஸ்பரிசத்தில்
உளறத்தொடங்கியிருந்தேன்..

பல்லியுடனான பேச்சுக்கள்
நீண்டு வளர்ந்தன..
இலங்கையின் போரினை போல..

முடிவில்…
பல்லியும் நானும் சேர்ந்தே அழுதோம்.!!

Tuesday, June 05, 2007

நீரடி எந்திரரை உருவாக்குதல் - Making of Underwater Robot

கடந்த நான்கு மாதங்களாய் எனது உறக்கத்தை கெடுத்து கொண்டு இருக்கும்
தலையிடி இந்த நீருக்கடியில் இயங்கும் எந்திரர் தான்.

இந்த வருடம் எனது கலாசாலை சார்பில் எந்திரர் போட்டியில பங்களிப்பு செய்ய போகும் எந்திரரை செய்யும் பணி பொறியற்பீட மாணவர்களாகிய எனக்கும் என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.



சிங்கபூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் எந்திரர் போட்டியில் (Singapore Robotic Games)கடந்த வருடம் தான் ( 2006ம் ஆண்டு) நீரடி எந்திரர் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதையே எங்களது இறுதியாண்டு குழு ஒப்படையாகவும் செய்யவிருக்கிறோம்.
வெற்றி பெற்றால் 1000 வெள்ளி( சிங்கபூர் டொலர்கள்).அத்துடன் தங்கப்பதக்கங்களும்.
நாங்கள் செய்யவிருப்பது புறத்திலிருந்து கட்டுபடுத்தும் நீருக்கடியிலான எந்திரரை.( Remote controller under water Robot)

பல தரப்பிலும் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள்.
முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசுகளுக்கு முறையே தங்க வெள்ளி வெண்கலப்பதக்கங்களும் காசும் பரிசாக கொடுக்கப்படும்.
போட்டிக்கான விதிகளும் ஒழுங்கு முறைகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.



நுண்ணறிவு எந்திரர்.(Intelligent Robot) என்பது போட்டியில் ஈடுபடுத்தப்படும் எந்திரர் வகைகளுள் ஒன்று.

அதன் கடமை நிறப்பந்துக்களை பிரித்து உணர்ந்து அவற்றை சேகரித்து அப்பந்துகளை அவற்றுக்குரிய தனித்தனி பெட்டிகளில் இடவேண்டும்.

இவ்வெந்திரரின் ஓடுதளம் “L” வடிவிலமைந்தது.அவ்வோடுதளத்தில் ஓடி பந்துகளை சேகரித்து அவற்றை அவற்றுக்கே உரிய சரியான நிறப்பெட்டிகளில் பிரித்து இடவேண்டும்.

போட்டியில் நேரம் முக்கியமான விடயமாகும்.உதாரணமாக போட்டியில் பங்குபற்றிய இரண்டு எந்திரர்கள் தங்களுக்காக கொடுக்கபட்ட வேலையை செவ்வனவே செய்து முடித்து இருப்பின் எந்த எந்திரர் குறுகிய நேரத்தில் அவ்வேலையை செய்து முடித்ததோ அதையே பரிசுக்குரிய எந்திரராக தேர்ந்தெடுப்பர்.


நீருக்கடியில் இயங்கும் எந்திரர்கள் விசித்திரமானவை..

கடந்த ஆண்டே போட்டியில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவ்வளவு சுலபமாக செய்ய கூடியவை அல்ல.

நீருக்கு அடியில் இயங்க செய்ய வேண்டும் என்பதால் நீர்தடுப்பு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

பரீட்ச்சார்த்த முயற்ச்சிகள் கூட மிகவும் கவனமாகவே செய்யப்பட வேண்டும்.


எந்திரர்களின் செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு அவற்றை இரு வகையாக பிரிக்கலாம்.

1.தானியங்கி எந்திரர்.
2.புறத்திலிருந்து கட்டுபடுத்தும் எந்திரர்.

தானியங்கி எந்திரர். தனக்குரிய பணிகளை தானே செய்யும்.
ஆளியை(switch) தட்ட வேண்டியது மட்டும் தான் மனிதர்களின் வேலையாக இருக்கும்.

புறத்திலிருந்து கட்டுப்படுத்தும் எந்திரர்களுக்கு மனிதரும் சேர்ந்து இயங்க வேண்டும். தொலைவியக்கியை(Remote controller) பயன்படுத்தியே இவ் எந்திரர்களை இயக்கலாம்.
தொலைவியக்கியைநாம் எப்படி கையாளுகிறோம் என்னும் அடிப்படையிலேயே அவை இயங்கும்.
உதாரணமாக முன் செல்லும் பொத்தானை அழுத்தினால் முன் செல்லும்.
பின் செல்லும் பொத்தானை அழுத்தினால் பின் செல்லும்.



போட்டி விதிகளுக்கமைய ஒரே குழுவினால் இரண்டு எந்திரர்களை கூட
போட்டியில் பங்கேற்க செய்யலாம்.
ஆனால் அவை ஒத்தவையாக இருத்தல் கூடாது. தோற்றத்திலோ கையாளப்படும் தொழில்நுட்பத்திலோ.

நீருக்கடியிலான எந்திரர் செய்ய வேண்டிய பணி:-

“L “வடிவிலமைந்த நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் நடுப்பகுதியில் பதினாறு காந்தத்துண்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.பொருத்தப்பட்டு இருக்கும் அக்காந்ததுண்டுகளை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து தொட்டியின் இருமுனைகளிலும் போட வேண்டும். (இரண்டு காந்த துண்டுகளை ஒரே சமயத்தில் எடுத்தல் முடியாது).
அதே சமயம் இரண்டு முனைகளிலும் சமனாக பிரித்து போட வேண்டும். எட்டு காந்த துண்டுகளை ஒரு முனையிலும் மற்றைய எட்டு காந்த துண்டுகளை மற்றைய முனையிலும் இட வேண்டும்.

எந்திரரை இயக்குவதற்கு பேசிக் ஸ்ட்டாம்ப் நிரலாக்கத்தை(Basic stamp programming) பயன்படுத்தலாம்.வேறு நிரலாக்கங்களையும் பயன்படுத்தலாம்.

பேசிக் ஸ்டாம்ப் தட்டின் படம் (Basic stamp board)





மிக இலகுவாக கற்று கொள்ள கூடிய நிரலாக்கம் (programming) தான் Basic stamp.
i micro போல கடினமானது அல்ல.
ஆனால் வேகம் குறைந்தது எனும் குற்றச்சாட்டு சிலரிடம் உண்டு.
வேகத்துக்காகவே i micro வை தாங்கள் உபயோகிப்பதாக நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.
ஆனால் பாவனையாளர்களின் பயன்பாடு குறித்த தேவையையும் கருத்திற் கொள்ள வேண்டும்.


முதற்கட்டமாக எந்த சிக்கலும் இல்லாமல் நிரலாக்கம் (programming) எழுதி முடித்தாயிட்டு.
ஆனால் பரிதாபகரமாக நாங்கள் எதிர்பார்த்த செயற்பாட்டை நாங்கள் வடிவமைத்த முன்வடிவம்(first prototype) தரவில்லை.எங்களது நிரலாக்கத்திற்க்கு அமைய வடிவமைப்பு இயங்கவில்லை.என்பதே பிரச்சினைக்குரிய காரணம்.



ஆதலால் இன்னும் ஒரு வடிவத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இரவுகளும் பகல்களுமாக எந்திரரின் முன்னமைப்பை செய்து முடிக்க சென்ற காலம் கவலையை அளிக்கிறது.

நினைவுகளில் இருக்கட்டும் என எந்திரரை புகைப்படம் பிடித்து வைத்திருக்கிறேன்.

:-(


Sunday, June 03, 2007

பெண்ணின் மடி

அடர்ந்த காடுகளின் நடுவே ஓடிக்கொண்டு இருக்கிறது …..
சொல்லோணா துன்பங்களில் இருந்து விடுபட்டு..
மெளனித்து விடுபட்டு மெளனித்து..

காட்டு பூனைகளிடத்தும்…..
இன்னும் சில காட்டு மிருகங்களிடமும் பேச்சு கொடுத்த படி
இடை இடையே.. கொட்டாவியும் விட்டபடி ..
சலிப்பில் விசும்பிய படி ..
இனம் தெரியா மொழிகளில் ஊளையிட்டபடியும்.

வெளிச்சத்தை தான் தேடி ஒடுகிறது.
பாலைவனங்களில் புதைத்து விட்ட ..
தகிப்பான ரகசியங்களை காவு கொண்டபடி

ஏதாவது புசிக்க கொடுக்க வேண்டும் ..
களைத்து களைத்து மூச்சிரைக்கிறது.
தண்ணி வேணாம் என்கிறது ..
மோரும் வேணாம் என்கிறது..
சோறு வேணாம் என்கிறது ..
எதை தான் கொடுப்பது ..

அலறிக்கொண்டே இருக்கிறது..
இனம் தெரியா .. ஏதேதோ மொழிகளில்
கண்ணீருக்கு சமானமாய் ஏதவது இருப்பின்
குடிக்க தா என்கிறது…

விழிகள் அகல விரித்து.. காட்டு மரங்களிடையே..
ஒழிந்திருக்கும் பற்றையையும்...
அதிலே.. எட்டி எட்டி பார்த்து மறையும்
இனம் தெரியா வண்டினங்களையும் ஊர்வனங்களையும்...
கேள்விக்குறியோடு பார்க்கிறேன்..

கண்ணீருக்கு சமானமாய் ஏதாவது தா…தா..
இந்த முறை ..மிக ஆவேசமாய் ஓடத்தொடங்குகிறது
எதிரில் எதிர்பட்ட கொடிகள் .. மரக்கொப்புகள்.
முகில்களும் கூட இரண்டாய் பிளவு பட.


முடியாமையின் உச்சம் தான் ..
காட்டு மிருகங்கள்.. அலறி ஓடுகிறது ..
பேரிரச்சல் வான வெளி எங்கும்...
பரந்து விரிந்து வியாபித்து ..

காடு முடிந்து ..
வயல் ….
வயல் .. பச்சை பசேல் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல்.
நெல்லை தின்டாவது .. பசியை போக்கும் என..
பார்கிறேன்

நெல் வயல் மேலே.. இரைந்து இரைந்து போனதில்
வயலின்.. நிலம் இரண்டாய் பிளவு பட்டு
பிளவுண்ட இடத்தில் இருந்து
தண்ணீர் . ஒரு நீர் வீழ்ச்சியை போல..

இன்னும் தான் ..
ஓடுகிறது

மலை..
மலையடிவாரங்களின் வழியே..
மனிதர்களை எல்லாம் திட்டி தீர்த்தபடியே ஓடுகிறது.
இனம் தெரியா .. பேரிரச்சலுடன்.

ஓடி ஓடி ஓடி
களைத்து ..
ஒரு பெண்ணின் காலடியில் குந்துகிறது.
அம்மாவின் முக சாயல்.
பெண் அழுகிறாள் …
தலையை கொஞ்சம் தடவி விடுகிறாள்.

ஓடி ஓடி வந்த களைப்பில்..
மூச்சிரைக்கிறது..
இப்போது ஓவென்று ஓவென்று ..
மிக இரைச்சலான சத்தத்துடன்..
அழ தொடங்கிற்று..

அழுகை பேரிரச்சல் கொஞ்சமாய் கொஞ்சமாய் குறைந்து
முனகலாய்...
அழ தொடங்கிற்று.
அழுது அழுது அழுது..
முடியாமையின் . .. … விழிம்பில்..

அப் பெண்ணின் ஒரு மடி இரவல் கேட்டு ..
மயங்கி விழலாயிற்று ..
அப்படியே மயங்கி விழலாயிற்று…!!

Tuesday, May 29, 2007

ஆண் சிலந்திகள்..!

என்னுள்ளே சில சிலந்திகள்
அத்துமீறி பிரவேசித்து...
என் பனி படர்ந்த இதயத்தை மெதுவாய் முத்தமிடும்
அந்தரத்தில் அவை வலைகட்டி தொங்கும்...

என்றென்றோ புதைத்த...
மன ஆழ கிடங்குகளில் இருக்கும்
கறைபடிந்த ஏடுகளையும் கறை படியா ஏடுகளையும்
கிளறி எடுக்கும்...
கேள்வி எழுப்பும்...

எண்ணற்ற மொழிகளில் எழுதிய
சாபங்களில் சுவட்டை..
நாக்கால் நக்கும்..
சாபங்கள் சிலந்திக்கும் சாபமிடும்..
சிலந்தி கேள்வி எழுப்பும்...

ரணமான கணங்களில்...
கசிந்த இரத்த கறைகளை
மோப்பமிடும்..
ஏன் ஏன் .. ஏன் ..
என்று கேள்வி எழுப்பும்..

அர்த்தம் இல்லா சிலந்தியின் கேள்வியில்
இதயம் சலிப்படையும்
நான் பெண் என்று சொல்லும்...

சிலந்தி சிரிக்கும் .....
பதில் கிடைத்த ஆவேசத்தில்..
சிரிக்கும்........
சிரித்து கொண்டே இருக்கும்...
இரத்த நாடிகள் நாளங்கள் எங்கும்
சிலந்தியின் சிரிப்பதிர்வுகள் பரவும்..

சிலந்தி மீண்டும் தோண்டும்..
காரணம்..தேடி தோண்டும்
இதயம் வலியில் துடிக்கும்
வேண்டாம் என்று கெஞ்சும்...

சிலந்தி தோண்டும்..
ஆண் பலத்துடன் தோண்டும்..
கேள்வி எழுப்பும்...
சிலந்தி கேள்வி எழுப்பும்..

இதயம் மெளனித்து இருக்கும்.
சிலந்தி மீண்டும் மீண்டும்
கேள்வி எழுப்பும்..
இதயம் மெளனித்தே இருக்கும்..

வலிகளின் உச்சம் இதயம் இரத்தம் கசியும்..

சிலந்தி தோண்டும்..
கிழித்து குதறி தோண்டும்..
தன் முழு பலத்துடன் தோண்டும்..
தோண்டிக்கொண்டே இருக்கும்..

வலிகளின் உச்சம் புறககணிப்புகளின் உச்சம்
இதயம்...
சிரிக்கும்... சிரிக்கும்
ஆவேசமாய் சிரிக்கும்...
அதிர்ந்து அதிர்ந்து சிரிக்கும்
சிரிக்கும்...

சிரிப்பதிர்வில் .. சிலந்திகள்
வெடித்து சிதறும்..
சிலந்திகள் வெடித்து சிதறும்!!!

என்னை உறங்க விடுறீங்களே இல்லை.

உடைந்து போய் இருக்கும் தருணங்களில் ஆறுதல் அளிப்பது கவிதையும் இசையும் மட்டும்தான்.....

அவ்வாறு ஒரு தருணத்தில் மனதை பறி கொடுத்த பாடல் தான்..
"அஸ் டெக்க பியான" (சிங்கள மொழிப்பாடல்)

ருகாந்த குணதிலக எனக்கு மிக பிடித்த சிங்கள மொழிப்பாடகர்.

இசைக்கு மொழிகள் தேவையில்லை தான் இருப்பினும் அர்த்தம் உணர்ந்து கேட்டும் போது மனம் லயித்து போவது உண்மைதானே...


சிங்களத்தில் :- கவிஞர் பெயர் தெரியவில்லை

தமிழில் :- கீர்த்தனா

பாடலை பாடியவர் :- ருகாந்த குணதிலக






கண்களிரண்டையும் மூடி என்னால் உறங்க முடியவில்லை.
இல்லை.... இல்லை ....
என்னால் உறங்கவே முடியவில்லை.

மார்புக்குள் துடித்துக்கொண்டு
என் மனதில்... நடந்து கொண்டிருக்கும்
நீங்க
என்னை உறங்க விடுறீங்களே இல்லை.

மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்
அதற்கும் நீங்க இடம் விடுறீங்க இல்லை.

மிகநெருங்கி வந்து..
நீங்க செல்லம் கொஞ்சும் போது

எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.



ரகசியம் ஒன்று சொல்ல இருக்கு.
உங்கட காது மடல்களுக்கு
மிக அருகாமையில்.

நீங்க துராத்தில் இருப்பதால
என்னால சொல்ல முடியவில்லை..
மற்றவர்களுக்கும் அது கேட்டு விடுமென்பதால்.

என் தங்கமே.......
இதயத்தை துன்புறுத்தாமல்
நெருங்கி வாங்க....
காதலோடு.

சொல்வதற்கு எனக்கு நிறைய விடயங்கள் இருக்கு
இறுக்கமான அணைப்பினுடான காதலோடு.


கண்களை மூடி என்னால் உறங்க முடியவில்லை.
இல்லை இல்லை
என்னால் உறங்கவே முடியவில்லை.

மார்புக்குள் துடித்துக்கொண்டு
என் மனதில் நடந்து கொண்டிருக்கும்
நீங்க
என்னை உறங்க விடுகிறீங்களே இல்லை.

மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்
அதற்க்கும் நீங்க இடம் விடுகிறீங்க இல்லை.

மிகநெருங்கி வந்து
நீங்க செல்லம் கொஞ்சும் போது

எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.





Friday, May 25, 2007

வறுமை- மாடு- மனிதன்.

சூரிய வெப்பம் ஏன் இப்படி கொதிக்குது?
கடல் மண் ஏன் வெப்பமாய் இரிக்கி?
கடவுளின் படைப்பு !!!???

ஓ அப்படியா..

நாம ரண்டு பேரும் ஏன் இந்த கிழட்டு ஆமைக்கு பின்னால போய் கொண்டு இரிக்கம்?

இந்த ஆமை முட்டை போட தான் போய் கொண்டு இரிக்கி.
முட்டைய எடுத்தம் என்டா இன்டைக்கு இரவைக்கு வயிறார தின்னலாம்.

ஆமை கடற்கரை க்கு வாற முட்டை போடுறதுக்க?

ஓம்.. அம்மை சொல்லியிருக்காவு.

வெறும் காலோட இன்னும என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா. மண் சுடுது.

உன்னால எப்பிடி ஏலுது?

என்னால ஏலும்……

எனக்கு பசிக்கு வயிறு முட்ட தின்ன ஏதாவது வேணும்
கால் கொந்தளிச்சு .. காலே இல்லாம போனாலும் பரவால்ல.

என்னால இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா .. உயிரே போயிடும் போல இரிக்கி.

உனக்கு இந்த கடற்கரை ஓரமா இரிக்கிற பற்றை செடியால செருப்பு செஞ்சு தாறன்.

ஓம்……கெதியா செஞ்சு தா சுணங்காத..

இப்ப முடியுதா?

கனக்க இல்ல கொஞ்சமா சுடுது..


கொஞ்சம் பொறன்டி.. இன்னும் கொஞ்ச துரம் போனா ஆமை முட்ட போடும் அத புறக்கி போவம்
ஆமை முட்ட நல்ல சத்து “அம்ம “ சொல்லியிருக்காவு.

ம்…சரி…

ஆமை எத்தின முட்டை போடும்?
ஆமை ஆயிரம் முட்டைய சத்தம் இல்லாம போடுமாம்.

ஓ……

சரி அப்ப கட்டாயம் எல்லாருக்கும் போதுமாயிரிக்கும்.
எனக்கு உனக்கு அம்மைக்கு .. மற்ற எல்லாருக்கும்…

குடிச்சு போட்டு கந்தோரில படுத்திரிக்கிற அப்பாக்கும் போதுமா இரிக்கும் என்ன?நிறைய நாளைக்கு..?

ம்…

அப்பா ஏன் குடிக்கிறவரு?
அவருக்கு கவலையா?
அம்மைக்கு தானே நிறைய கவலை அப்ப அம்ம ஏன் குடிக்கிறது இல்ல??

அம்ம "பொம்பிள" குடிக்க மாட்டாவு.

அப்ப பொம்பிளையள் குடிக்க ஏலாதா?

ஏலா. ..பொம்பிளையள் அடக்க ஒடுக்கமா இரிக்க வேணும்.
வாயில மண் இல்லாட்டி.

ஏன் ????

தெரியாடி….எனக்கு…!!

அப்பாக்கு என்ன கவலை?
அவருக்கு அம்மைய பிடிக்க இல்லையா?

தெரியாடி ….இந்த மாதிரி உன்ட லூசு கேள்விய எல்லாம்
இரவில நட்சத்திரம் எண்ணுவியே படிக்காம… அப்ப கேளு..
இல்லாட்டி அப்பருட்ட கேளு…

அக்க .. கால் சுடுது.. நீ செய்த செருப்பு சரியில்ல.
வா நாம வீட்ட போவம்..
ஆமை முட்டை போடாது அக்க …!
நாம திரும்பி போவம் வா……
அந்த கிழட்டு சனியன் பிடிச்ச ஆமை போய் கொண்டே இரிக்கி ..

பாவம் டி கிழட்டு ஆமை..
நாமதானே முட்டைய எடுக்க போறம்…
அது பின்னால வா முட்டை குடுக்கிறன் என்டு.உன்ன கூப்பிட்டதா?

எனக்கு முட்டை வேணா.நான் வீட்டுக்கு போகோணும்.
என்னை வீட்டுக்கு கூட்டித்து போ…

நாம மாட்டுக்கு போடுற மரவெள்ளி கிழங்கு வேரை எடுத்து அவிச்சு தின்னலாம். எனக்கு முட்டை வேணா…..

சும்மா வாடி ….

இல்ல “அக்க”…எனக்கு முட்டை வேணா மரவெள்ளி கிழங்கு
போதும்.

சரி .. நாம போவம்.
எந்த வழியால போறது .
பார்க்கிற இடமெல்லாம் ஆமை தடம் தானே இரிக்கி..
இது என்ன கோதாரி..!!
எங்கயோ இடம் தெரியாம வந்துட்டம் .
இந்த கிழட்டு ஆமை எங்கள எங்கயோ கூட்டித்து வந்துத்து.

வந்த வழியால திரும்பி போவம் அக்க
அப்பிடியே கடலை .. அடியா கொண்டு.
வேற வழி இல்ல நமக்கு ..

அம்ம மாவிடிக்க போயிருப்பாவு.
நாம போய் சேரும் போது சுணங்கிரும்.
இனி என்ன பண்ணுறது?

வாடி
அந்த தெருவால வீட்ட போவம்.
பாசிக்குடாக்கு வந்துத்தம் ...!

நீதான் ஆமை முட்டைக்கு அவா பிடிச்சு வந்தாய் நான் அப்பவே
சொன்னன். வேணாம் மரவெள்ளி கிழங்கு வேர தின்டுபோட்டு கிடப்பம் என்டு.




வா .. இது தான் ஆரைப்பத்தைக்கு போற சரியான வழி..
போவம் வா..

நீ .. என்ன ஏமாத்துறாய்..

இல்லடி வா .. இது தான் வழி.

ம்…

நடந்து நடந்து கால் எல்லாம் நோகுது.

கொஞ்ச தூரம் தான்
“இந்தா அவ்வடத்துக்க தான் இரிக்கி”

ம்…

வடிவு சுந்தரிகள் இரண்டு பேரும் எங்க சுத்தித்து வாறாங்களோ???
இல்ல அம்ம நானும் இவளும் ஆமை முட்டைக்கு போனம்…

மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேரை புறக்கித்து வர சொன்னா
இந்த இடமெல்லாம் விளையாடி திரிஞ்சு போட்டு இப்பதான்
வாறாளுகள்...

நான் என்னத்த செய்வன் ஒரு புள்ளையா ரண்டு புள்ளையா ..
ஒன்பது புள்ளைகள்.
எப்பிடி இரணம் குடுப்பன்.
சரி ..சோனக தெருவுக்கு போய் மாவிடிச்சு குடுத்துத்து ..சந்தைக்கு போய்...
ஏதும் இரணம் வேண்டுற என்டா வேண்டித்து வாறன்.

சந்தை கலைஞ்சு போயித்து ..
யாதால ஒன்டும் இல்ல..

வாழைப்பழ சுழையும் செல்வன் மீனும் தான் இருக்கி
ஆக்கி தாறன் தின்னுங்க. செல்வன் மீன் சொதியும் சோறும் நல்லா இரிக்கும் மக்காள்..

ம்.. சரி அம்ம ..இவள் சின்னவள்..
கிணத்தடியில குழிச்சு கொண்டே இரிக்கிறாள்
வாழிய தாறாள் இல்ல எனக்கு குழிக்க.

குடுடி வாழிய புள்ள பாவம்.

அம்ம பாவம் .. அக்க..
எத்தின காலத்துக்கு தான் இப்பிடி ….
காலம் இப்பிடியே போயிருமா?
அம்மை மாவிடிச்ச காசில தான் ஒரு நேரம் தின்ன வேணுமா?
காலமையில மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேர்தானா?

என்டைக்காவது நாம புது சட்டை போட்டு திருவிழாக்கு போய் வருவமா?
வயிறு நிறை சோறு தின்னுவமா?

ம்…………. நாம மாடா புறந்து இரிக்கலாம் அக்க...
புல்லையும் மரவெள்ளி வேரையும் வயிறு முட்ட தின்டு கழிச்சு திரிஞ்சிரிக்கலாம்..!!!

(*பாசிக்குடா *ஆரைப்பத்தை( ஆரையம்பதி) *சோனக தெரு – இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கும் இடங்கள்.
*கதையில் கையாளப்பட்டிருப்பது மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழ் )

கரப்பான்

சின்ன அறையில் பல்லி எச்சம் முதுகில் தெறிக்க ..
அது குசினி..
எனக்கே எனக்காக ஒதுக்கபட்டதிருப்திகரமான செளகரியமான மேசை
அது ..கதிரை கையில் போட்ட காய்ந்து இத்து போன பலகை துண்டு.

கதிரையும் பலகை துண்டுமாய்..இரவெல்லாம் நான் ..
காலையில் அதுவே எனக்கான இருக்கையாகவும் படுக்கையாகவும் மாறும்.
பிறிதொரு நாள் அதுவும் பறிபோனது...

இரவு பிடிக்கும் ..
மழை இரவு மிகவும் பிடிக்கும்.
மழைஇரவு நான் படிக்கதேர்தெடுக்கும் மிக சரியான தருணம்.

தொண்டையை அடைத்து வெளிவர முடியாது போன
கவலையின் தடயங்களை பூனையுடன் பகிர்ந்து கொள்வதுஅப்பொழுதுதான். ..!

அப்படி..
ஒரு மழைகால இரவின் போதுதான்..
என் பள்ளி சப்பாத்துக்குள் கர கர சத்தம் !
பூனையும் நானும் உன்னிப்பானதில் கண்டுபிடித்தது
ஒரு உயிர் கரப்பானையும் உயிரற்ற கரப்பானையும்.
யாரோ மிதித்து போய் இருக்க வேணும்..!

உறவு பிரிந்த கரப்பானின் வலி ..
என் உடல் முழுதும் ஒரு கணம் உலுப்பிச் சென்றது.

என்றென்றோ அடித்து கொன்ற கரப்பான்களுக்காய்
ஒரு முறை முழுதாய் வாய் விட்டு அழுதேன்.

இன்று என்வீட்டில் கரப்பான்களே இல்லை..
மழை இரவு தான் நெடுகிலும்….

எண்முறை இலத்திரனியல் - 1

வாழ்க்கையே இணையமயமாகி போய்விட்டது.
ஆனால் இலத்திரனியல், பொறியியல் , கணினி போன்ற துறைகளில்
ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் கிடைக்கும் இணைய தகவல்கள் தமிழில் கிடைப்பதில்லை.

தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் தமிழர்கள் இத்துறைகளில் தேர்ச்சி அடைய முதலில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம். ஆனால் ஏன் அதிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது தான் ஆதங்கம்.
எண்முறை இலத்திரனியலின் ஆரம்பம் எண்களே.


எண்முறைமைகளும் அடிமானங்களும். (பிரதான எண்முறைகள்)

1.பத்தடிமான எண்கள்.
2.இரண்டடிமான எண்கள்
3.எட்டடிமான எண்கள்
4.பதினாறினடிமான எண்கள்

பத்தடிமான எண்கள்

பத்தடிமான எண்களுக்கு மொத்தமாக 10 எண்கள் உண்டு ( 10 digits).
அவை 0 – 9 வரையாகும்.பத்தடிமான எண்களின் அடி 10 ஆகும்.

உதாரணம் 1:-
23535 என்னும் எண்ணுக்கான நிறைகள் (weights) கீழ்வருமாறு எழுதப்படும்.




உதாரணம் 2:-





இரும எண்கள் (இரண்டடிமான எண்கள்)

அடி இரண்டை கொண்ட இரும எண்களுக்கு எண்கள் இரண்டு(2 digits) ஆகும்.
அவை 0 ,1 .

உதாரணம்3:-
10111 என்னும் இரும எண்ணுக்கான நிறைகள் கீழ்வருமாறு எழுதப்படும்.




உதாரணம் 4:-








மேற்கண்ட வாறே எண்ம எண்களுக்கும் பதினறும (பதினாறினடிமான) எண்களுக்கும் எழுதப்படும்.
எண்ம எண்களுக்கு எண்கள் 8 ஆகும். ( 0 -7)
பதினறும எண்களுக்கு எண்கள் 16 ஆகும் (0 -9 வரை A- F)
அவையாவன 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F.



இரும எண்களின் வீச்சு


இரும எண்களினால் எழுதப்பட கூடிய அதிகூடிய எண் 255 ஆகும்.
(11111111 (இரண்டின் அடி))


சமன்பாடு:-



ஒப்பீடு



Wednesday, May 23, 2007

வணக்கம்

வணக்கம்
வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்
பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.
பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.

வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.
முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.

நன்றி.